ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.


ராஜஸ்தான் அரசியல்:


தொடக்கத்தில், முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது. 


இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார்.


இருப்பினும் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதிலும், பைலட், கெலாட்டுக்கு இடையேயான பிரச்னை முடிந்தபாடில்லை. இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான இருக்கின்றன.


சஸ்பென்ஸ் வைக்கும் சச்சின் பைலட்:


புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை தனது தந்தை ராஜேஷ் பைலட்டின் நினைவு நாளான இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் தனது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளார் சச்சின் பைலட்.


ஊழலுக்கு எதிராக போரிடுவேன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். "இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளேன். இங்குள்ள மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக உள்ளனர். என் குரல் பலவீனமாக இல்லை.


நான் பின்வாங்க மாட்டேன். தேசத்திற்கு உண்மையான அரசியல் தேவை. இளைஞர்களின் எதிர்காலத்துடன் மக்கள் விளையாடுவதை நான் விரும்பவில்லை. எனது கொள்கை தெளிவானது. தூய்மையான அரசியல் வேண்டும்" என சச்சின் பைலட் பேசியுள்ளார்.


புதிய கட்சியா?


ராஜஸ்தானில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், சச்சின் பைலட் புதிய கட்சியை தொடங்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அவரது ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், தன்னுடைய அடுத்த அரசியல் நகர்வு குறித்து சச்சின் பைலட் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.


சச்சின் பைலட், புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியான செய்திகளுக்கு காங்கிரஸ் தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் பேசுகையில், "எங்கள் கட்சித் தலைவரும், நாங்களும் இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைப்பதை உறுதி செய்வோம்" என்றார்.