குஜராத் மாநிலத்தில் மணமேடையில் வைத்து மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அந்த திருமணம் திட்டமிட்டபடி நடந்துள்ளது.


திருமணம் என்பது மனிதர்களின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று. மணப்பந்தலில் அத்தகைய தருணங்களை காண ஆவலுடன் காத்திருப்பார்கள். எந்தவித தடங்கலும், சச்சரவுமின்றி அத்தகைய நிகழ்வுகள் சுமூகமாக நடக்க வேண்டும் என்பது வேண்டுதலாவும் இருக்கும். ஆனால் சில நேரங்களில் ஏற்படும் சோகமான நிகழ்வுகள் சம்பந்தப்பட்டவர்களை கடந்து சமூகத்திலும் பேசுபொருளாக மாறும். அப்படியான ஒரு சம்பவம் தான் குஜராத்தில் நடந்துள்ளது. 


குஜராத் மாநிலம் பாவ்நகரைச் சேர்ந்த ஹெட்டால் என்ற பெண்ணுக்கும், நாரி கிராமத்தைச் சேர்ந்த விஷால் என்பவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்றைய தினம் சுபாஷ்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கோலகலமாக தொடங்கியது. மணமக்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திருமண சடங்குகளில் பங்கேற்றனர். 


ஆனால் இந்த சந்தோசம் அடுத்த சில நிமிடங்களில் பறிபோனது. மணமகள் ஹெட்டல் தனது மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து மயக்கம் அடைந்த அவரை  குடும்பத்தினர்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹெட்டலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் சோகமடைந்தனர். 


ஆனாலும் சோகத்திற்கு மத்தியில்  திருமண கொண்டாட்டங்களை தொடர்ந்து நடத்த இருவீட்டு உறவினர்களும் முடிவு செய்தனர். அதன்படி ஹெட்டலுக்கு பதிலாக அவரது தங்கையை மணப்பெண்ணாக மாற்றி விஷாலுக்கு  திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்வு முடியும் வரை ஹெட்டலின் உடல் குளிரூட்டப்பட்ட பாக்ஸில் வைத்து பதப்படுத்தப்பட்டது. 
மணமகள் இறந்த நிலையில், அவரது தங்கையை மணமகளாக்கி நிற்க இருந்த திருமணம் நடைபெற்ற  சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.