ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடே பிரிக்ஸ் மாநாடு என்று அழைக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் நடைபெற்று வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வரத் தயார்:
கசான் நகரில் இன்று தொடங்கிய பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என்றும், ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியா – ரஷ்யா இடையே வருங்காலங்களில் அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் போர்:
அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாடுகளுக்கு நட்பு நாடாக திகழும் இந்தியா இந்த போரை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி இந்த போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இரு நாடுகளும் ஒத்துழைத்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே இந்தியா அறிவித்திருந்தது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியா:
இந்த சூழலில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை ரஷ்ய அதிபர் புதினிடம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தால் உலகளவில் இந்தியாவின் மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபர் புதினிடம் நெருக்கமான உறவு கொண்டுள்ள உலக தலைவர்களில் இந்திய பிரதமர் மோடி மிகவும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.