Breaking News LIVE : நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 22 Apr 2023 12:37 PM
Breaking News LIVE : நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12 மணி நேர வேலை: 24ம் தேதி தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக  முக்கிய தொழிற்சங்கங்களுடன்  தமிழக அரசு நாளை மறுநாள்  ஆலோசனை நடத்த உள்ளது. தலைமை செயலகத்தில்  அமைச்சர்கள் எ.வ. வேலு,  தங்கம் தென்னரசு  மற்றும் சி.வி. கணேசன் உள்ளிட்டோர், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்  திங்களன்று மதியம்  3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.

Breaking News LIVE : 1,541 சிலைகளை மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை

1,541 சிலைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

Breaking News LIVE : பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு

பீகார் மாநிலம் பாட்னா நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு - போலீசில் புகார்

திருச்சியில் நாளை மறுநாள் ஓபிஎஸ் சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் குமார் மற்றும் பரஞ்சோதி ஆகியோர் புகார் அளித்துள்ளனர். 

அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி..!

வரும் ஏப்ரல் 26ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார்.

காலை உணவுத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

காலை உணவுத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 44,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 48,472 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 6,059 விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில். நேற்றைய தினம் கொரோனா காரணமாக 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : குரு பெயர்ச்சி விழா - சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு கும்பகோணம், மன்னார்குடி, நீடாமங்கலத்தில் இருந்து ஆலங்குடிக்கு  சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 336வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.