Breaking News LIVE: திமுக தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். வேட்பாளர் பட்டியலும் நாளையே வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
400 தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறவர் தரம் தாழ்ந்து பேசமாட்டார் என்று பிரதமர் மோடி விமர்சனத்திற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிட 250 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு இ - மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிஏஏ சட்ட திருத்தத்துக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
பாரத் மாதா கீ ஜே என்ற வாசகத்துடன் பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழ் மொழியே மூத்த மொழி என்றும், தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறியச் செய்வேன் இதுவே எனது வாக்குறுதி என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்து மதத்தை விமர்சிக்கும் இந்தியா கூட்டணியினர் மற்ற மதத்தையும், மற்ற மதத்தினரையும் விமர்சிப்பதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் எனக்கு உத்வேகம் அளித்தது என்று பிரதமர மோடி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல கோடி மதிப்பிலான செயல்திட்டங்களை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவை திமுகவினர் இழிவுபடுத்தினர். மகளிருக்கான திட்டங்களுக்கு அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே, குறியாக இருக்கின்றனர் குறியாக இருக்கிறார்கள் : பிரதமர் மோடி ஆவேச பேச்சு..
மற்ற மதத்தினரை இந்தியா கூட்டணி விமர்சிப்பதில்லை.. அவர்கள் இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பார்கள். இந்துமதத்தின் சக்தி நமக்குத் தெரியும்.. திமுக - காங்கிரஸ் இந்து தர்மத்தை அழிக்க நினைக்கிறது. இண்டி கூட்டணியின் தீய எண்ணம் வெளிப்பட்டுவிட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் கொட்டை எழுத்தில் ஓம் சக்தி என்று எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு சக்தி என்றால் என்ன என்று நன்றாக தெரியும் - பிரதமர் மோடி
ஏப்ரல் 19-ஆம் தேதி, தமிழ்நாட்டில் இருந்துதான் எதிர்கட்சியினருக்கு அழிவு தொடங்குகிறது. அவர்களின் அழிவை தமிழ்நாடு தொடங்கி வைக்கும். உங்களுக்கு சேவை செய்யவும், தமிழ்நாட்டின் பெண்களுக்கு சேவை செய்யவும் நாங்கள் உறுதி ஏற்று இருக்கிறோம் : பிரதமர் மோடி ஆவேச பேச்சு
பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது; ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும் - பிரதமர் மோடி
Kedarnath Like Tamilnadu : தமிழ்நாட்டை கேதார்நாத்தைப்போல புண்ணிய பூமியாக மாற்றுவோம். சுப்ரமணிய பாரதியார் பெண் சக்தியை வழிபட்டவர். நானும் பாரதியின் வழியில் வந்த ஒரு சக்தி உபாசகன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு
PM Modi In Salem : மகளிர் சக்தியைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நாம் காமாட்சியையும், மீனாட்சியையும் வழிபட்டு வருகிறோம் - பிரதமர் மோடி
PM Modi Salem : ”இந்துமதத்தின் சக்தி நமக்குத் தெரியும்.. திமுக - காங்கிரஸ் இந்து தர்மத்தை அழிக்க நினைக்கிறது. இண்டி கூட்டணியின் தீய எண்ணம் வெளிப்பட்டுவிட்டது. கோட்டை மாரியம்மன் கோவிலில் கொட்டை எழுத்தில் ஓம் சக்தி என்று எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு சக்தி என்றால் என்ன என்று நன்றாக தெரியும்” - பிரதமர் மோடி
ஆடிட்டர் ரமேஷ் உட்பட தமிழக பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை என்னால் மறக்க முடியவில்லை - பிரதமர் மோடி
வறுமை என்னும் கொடிய நோயை ஒழிப்பதற்காக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை 3வது முறையாக பிரதமராக ஆட்சி அமர்த்த வேண்டும். மோடி மட்டும் தமிழில் பேசினால் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி கூட இருக்காது - அண்ணாமலை
சேலம் பொதுக்கூட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜகவிற்கு கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவிற்கு தூக்கம் தொலைந்துவிட்டது” என தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் யோகா மாஸ்டர் ராம்தேவ் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவன மேலாண் இயக்குனர் பாலகிரிஷ்ணாவும் ஆஜராக உத்தரவு
பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் மேடையில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
நேற்று கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொள்ள வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மீதும், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணை. பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்ட காட்சிகள் வெளியானதை அடுத்து கோவை தேர்தல் அதிகாரி நடவடிக்கை
சேலத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சேலம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயகக் கட்சி I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், புதுச்சேரியில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். இந்தியாவின் ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்க I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம். அ.தி.மு.க.-விற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியான தகவல் தவறானது.” என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.
மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடனிருந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி 50 முற வந்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என கூறினார்.
பாஜக கூட்டணியுடனான அதிருப்தியால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கோடி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடிகர் மன்சூர் அலிகான் நடத்தி வருகிறார். அலுவலக பொருட்களை கட்சி பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், நேற்று பிரேமலதா பிறந்தநாள் விழாவில் மகளிருக்கு இலவச டெய்லரிங் வகுப்பிற்கான டோக்கன் வழங்கப்பட்டது. 300 மகளிருக்கு டோக்கன் வழங்கப்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதியான நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைக்க இருந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று மாலை பாஜக உடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் அம்முக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று கோவையில் ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட நிலையில் இன்று சேலம் வருகை தருகிறார். சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் மதியம் நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் முக்கியமாக பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
பாமக மற்றும் அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் முதலே இழுபறியில் இருந்தது. இந்நிலையில் நேற்று அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி முடிவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அரசியல் ட்விஸ்டாக பாமக திடீரென பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக இன்று சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொள்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நடப்பாண்டில் மட்டும் சுமார் 8 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளை முதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரையில் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த சூழல் இருக்கும் நிலையில், தேசிய அளவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் சிஏஏக்கு எதிராக தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தரப்பில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -