Breaking LIVE: குருவாயூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

கீர்த்தனா Last Updated: 26 Dec 2022 09:17 PM
குருவாயூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை

குருவாயூர் விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது,  உக்ரைனில் அமைதி நிலவ உதவ வேண்டும். ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி. ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் - தமிழ்நாடு அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு - தமிழ்நாடு அரசு தீவிரம்..!

தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு

கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. Directorate of Government Examinations (tn.gov.in) என்ற வலைதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு நிலை..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரி மாவட்டத்தினை நெருங்கி வருவதால், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக திரும்பியுள்ளனர். 

2ம் நிலை காவலர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழக காவல்துறையின் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Breaking LIVE: நகராட்சி நிர்வாக பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

வேலூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Breaking LIVE : ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Breaking LIVE: சாதி வருவாய் சான்றிதழ் - முதலமைச்சர் அறிவுறுத்தல் 

சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ் கோரொ விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Breaking LIVE: குற்றால அருவிகளில் குளிக்க தடை

மலைப்பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Breaking LIVE: நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Breaking LIVE: செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு சீல்

தென்காசி 6.53 லட்சம் சொத்து வரி செலுத்தாததால் செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.


 

Breaking LIVE: நல்லக்கண்ணு பிறந்தநாள்... நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார். நல்லக்கண்ணுவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர்கள் வேலு, பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.


 

Breaking LIVE: கோவை கார் வெடிப்பு சம்பவம்: என்ஐஏ அலுவலர்கள் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அலுவலர்கள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரளய் ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்..!

இந்தியா ராணுவத்திற்காக சுமார் 120 பிரளய் ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்த ஏவுகணைகள் குவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Breaking LIVE: அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள்... ரூ.92500 அபராதம்

சென்னையில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த 49 ஆம்னி பேருந்துகளிடம் 92,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. புகாரளித்த 9 பயணிகளுக்கு ஆம்னி பேருந்துகளிடமிருந்து 9,200 ரூபாய் வசூலித்து தரப்பட்டுள்ளது.

Breaking LIVE: அரசு, தனியார் பேருந்துகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே 2 அரசுப் பேருந்துகள், 2 தனியார் பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர். கள்ளபிரான் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததால் போராட்டம் நடத்தியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Breaking LIVE: திருநெல்வேலி நாலுமுக்கு பகுதியில் 9 செ.மீ மழை பதிவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை, அம்பாசமுத்திரம், நாலுமுக்கு பகுதியில் 9 செ.மீ, ஊத்துவில் 8 செ.மீ, சோழவந்தானில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.


 

Breaking LIVE: பொங்கல் தொகுப்பில் கரும்பு தரக்கோரி பாஜகவினர் போராட்டம்

பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் கரும்பு, தேங்காய் வழங்கக்கோரி தமிழ்நாட்டின் பல இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேங்காய், கரும்புகளை கைகளில் ஏந்தியபடி பாஜகவினர் போராட்டம்.


 

Breaking LIVE: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து..!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில் பாதிப்பு இல்லை என்றும், ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Breaking LIVE: நேபாளத்தில் 3ஆவது முறை பிரதமராகும் புஷ்பகமல் பிரசந்தா தஹல்!

நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்பகமல் பிரசந்தா தஹல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேபாள கம்யூனிட் கட்சியைச் சேர்ந்த புஷ்பகமல் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பு.

Breaking LIVE: நேபாளத்தில் உயிரிழந்த கைப்பந்து விளையாட்டு வீரர்: உடலை தமிழகம் கொண்டு வர கோரிக்கை

நேபாளத்தில் கைப்பந்து போட்டியில் பங்கேற்க சென்று உயிரிழந்த தமிழ்நாட்டு வீரரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அவரது பெற்றோர் மனு அளித்தனர்.

Breaking LIVE: எண்ணூரில் அலையில் சிக்கி மாயமான நபர்களை தேடும் பணி தீவிரம்!

எண்ணூரில் கடலில் குளித்த நான்கு பேர் அலையில் சிக்கி காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Breaking LIVE: சீனாவில் இருந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபர்: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!

சீனாவில் இருந்து ஆக்ரா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

Breaking LIVE: தமிழ்நாட்டின் மீது தொடரும் இந்தி திணிப்பு தாக்குதல்... முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் மீது இந்தி திணிப்பு தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக ‘மாமனிதர் நேரு’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Breaking LIVE: இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணையும் சீனா - பாகிஸ்தான் - ராகுல் காந்தி எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். ராணுவரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

Breaking LIVE: கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுங்கள் - பிரதமர் மோடி

கொரோனா பரவல் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு நடுவே கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

Breaking LIVE: கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுங்கள் - பிரதமர் மோடி

கொரோனா பரவல் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கொண்டாட்டங்களுக்கு நடுவே கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Breaking LIVE: சுனாமி நினைவு தினம்... 18 ஆண்டுகள் கடந்து மறையாத சோகம்

தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பலரும் சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பலமாக தாக்கியது. சுமார் 2,29,866 பேர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43,786 பேர் காணாமலே போயினர். 


 

Breaking LIVE: பொங்கல் பரிசுத் திட்டம்: ஜனவரி 2 தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

Breaking LIVE: பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்கள் நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன் நாளை முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Background

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 219ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (டிச.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.