டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது மாநாடு நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் (One Earth, One Family, One Future) என்ற கருப்பொருளுடன் மாநாடு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உலக தலைவர்கள்:


ஜி20 அமைப்புக்கு இந்தியா முதல்முறையாக தலைமை வகித்ததால் உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்கு சென்ற உலக தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் 
மரியாதை செலுத்தினர்.


இதை தொடர்ந்து, டெல்லி உச்சி மாநாட்டின் நிறைவு அமர்வில் ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவி பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றதை குறிப்பிட்டு பேசிய பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, "காந்திஜிக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, ​​தனிப்பட்ட முறையில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் என்பதை பிரதமர் மோடியிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


நான் தொழிலாளர் இயக்கத்தில் இருந்தபோது பல தசாப்தங்களாக நான் பின்பற்றிய முன்மாதிரியான அகிம்சை போராட்டத்தின் காரணமாக எனது அரசியல் வாழ்வில் மகாத்மா காந்திக்கு பெரிய அர்த்தம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். இன்று அஞ்சலி செலுத்த கிடைத்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.


"பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு நன்றி"


உங்கள் அனைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். ஜி-20 கூட்டமைப்பின் தலைவராக பிரேசில் இருக்கும்போது, இந்தியாவைச் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகள் செய்ததைப் போல குறைந்தபட்சம் ஏதாவது செய்ய முயற்சிப்போம். ஜி20 உச்சிமாநாட்டை நடத்தியதற்கும், தனது நாட்டின் தலைமையின் கீழ் மூன்று முன்னுரிமைகளை முன்வைத்ததற்கும் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


சமூக உள்ளடக்கம், பட்டினியை எதிர்த்த போர், எரிசக்தி மாற்றம், நிலையான வளர்ச்சி, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவை இதில் அடங்கும்.


இந்த முன்னுரிமைகள் அனைத்தும் தலைமை பதவி வகிக்கபோகும் பிரேசில் முழக்கத்தின் ஒரு பகுதியாகும். 'நியாயமான உலகத்தையும் நிலையான கிரகத்தையும் உருவாக்குவதே எங்கள் முழக்கம். இரண்டு பணிக்குழுக்கள் உருவாக்கப்படும். முதலாவதாக, பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி அமைக்கப்படும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளவில் அணிதிரட்டப்படும்.


தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் ஆயத்த அமைச்சர்கள் கூட்டங்கள் நம் நாட்டின் ஐந்து பிராந்தியங்களிலும் பல நகரங்களில் நடத்தப்படும். 2024ஆம் ஆண்டு, நவம்பரில் ரியோ டி ஜெனிரோ உச்சி மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.