Air Flight Crash Report: அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம், 32நொடிகள் மட்டுமே காற்றில் பறந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து - காரணம் என்ன?
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமானத்தின் கோர விபத்து தொடர்பாக, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் 15 பக்க அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அது ஏற்கனவே துறைசார் வல்லுநர்கள் எழுப்பிய சந்தேகம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தரையிலிருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயலிழந்துள்ளன. அதாவது, இன்ஜின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், ஒன்றன் பின் ஒன்றாக, ஒரு நொடி இடைவெளியில் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காக்பிட் ஆடியோ ரிக்கார்டரில், ”ஏன் துண்டித்தீர்கள்” என ஒரு விமானி கேட்பது, ”நான் துண்டிக்கவில்லை” என மற்றொரு விமானி பதிலளித்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் மோதியதா?
சுவிட்சுகள் 'CUTOFF' க்கு மாறியதால், இன்ஜின்களுக்கு ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை என்பது, விரிவான அறிக்கையில் முக்கிய பிரச்னையாக குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட உடனேயே ஆரம்ப ஏறுதலின் (Initial Takeoff) போதே ராம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தப்படுவதைக் காட்டியது. விமானப் பாதையின் அருகே குறிப்பிடத்தக்க பறவைகளின் நடமாட்டம் எதுவும் இல்லை. விமான நிலைய சுற்றுச் சுவரைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது. விபத்தில் சிக்குவதற்கு முன்பாக அந்த விமானம் வெறும் 32 நொடிகள் மட்டுமே காற்றில் பறந்ததும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டு வராத இன்ஜின்-2
நிலையை புரிந்து கொண்டு இரண்டு கட்-ஆஃப் சுவிட்சுகளும் மீண்டும் 'RUN' நிலைக்கு நகர்த்தப்பட்டதையும், முதல் இன்ஜின் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியபோதும், இரண்டாவது இன்ஜின் மீள முடியாமல் போனது பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதற்கு முன்பு, விமானம் 0.9 கடல் மைல்கள் மட்டுமே பயணித்ததாகவு, விபத்து பிற்பகல் 1.39 மணிக்கு நிகழ்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசவேலைக்கான அறிகுறிகள்:
விமான விபத்தில் நாச வேலைக்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ விபத்து நடந்த நேரத்தில் வானிலை பிரச்சினைகள் எதுவும் இல்லை. வானம் தெளிவாக இருந்தது, தெரிவுநிலை நன்றாக இருந்தது, காற்று அதிகமாக இல்லை. எரிபொருளிலும் எந்தவித கலப்படமும் இன்றி தூய்மையாகவே இருந்தது. விமானிகள் மருத்துவ ரீதியாகவும் உடல் தகுதியுடனும் ஓய்வெடுத்திருந்தனர், மேலும் அந்த வகை விமானங்களை ஓட்டுவதில் போதுமான அனுபவத்தையும் பெற்றிருந்தனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மோசமான விமான விபத்தாக கருதப்படும் அகமதபாத் விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உட்பட மொத்தமாக 270 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.