இரட்டை கோபுர தாக்குதல் போல நடக்கும்... டெல்லி விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் போலவே, லண்டனில் இருந்து டெல்லி வரும் ஏர் இந்தியா விமானம் வெடிக்க வைக்கப்படும் என்று மர்மநபர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டை கோபுரத்தின் மீது 2001ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்திற்கு காரணமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் தேடிப்பிடித்து பழிதீர்த்தது.

Continues below advertisement

இந்த நிலையில், இன்று இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில், டெல்லியில் உள்ள ரங்கோலா காவல் நிலையத்திற்கு நேற்று இரவு 10.30 மணிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.  அப்போது, காவல்துறையினரிடம் தொலைபேசியில் பேசிய நபர் அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலைப் போன்று, லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஏர் இந்தியா விமானமும் வெடிக்க வைக்கப்படும் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.


அந்த அழைப்பு வந்த சற்று நேரத்தில் டெல்லி போலீசாருக்கு மற்றுமொரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் மர்மநபர்கள் டெல்லி விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து, உடனே காவல்துறையினர் தங்களது உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி  விமான நிலையத்தில் டெல்லி போலீசாரும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விமான நிலையத்தின் உள்ளேயும், விமான நிலையத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லி போலீசார் பயணிகள் விரைவாக விமான நிலையத்திற்கு வருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.


பாதுகாப்பு கருதி பயணிகள், அவர்களது உடைமை, வாகனங்களின் சோதனைகளுக்காக பயணிகளை விரைந்து விமான நிலையத்திற்கு வருமாறு போலீசார் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக, டெல்லியின் கூடுதல் துணை ஆணையர் பிரதாப் சிங்கும் விமானங்களுக்கு செல்ல உள்ள பயணிகள் விரைந்து விமான நிலையம் வருமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு சோதனைகளில் விரைவாக பங்கேற்று தாமதத்தை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட இதே தினத்தில், நாட்டின் தலைநகரான டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் வெடிகுண்டு மிரட்டல் வந்த தொலைபேசி எண்கள் மூலம் மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு செய்திகள் படிக்க : கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு.. பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

Continues below advertisement
Sponsored Links by Taboola