மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்தம் பிளாக் மார்க்கெட் வழியாக விற்கப்படும் சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் அரசு மருத்துவமனை ஒன்றின் வெளியே ஆட்டோக்காரர்கள், பார்மசிஸ்ட், இடைத்தரகர்கள், சில நேரங்களில் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் பிளாக் மார்க்கெட்டில் ரத்தம் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

"ஒரு பாக்கெட் ரூ 2,400"

மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது ஹமிடியா மருத்துவமனை. இங்கு, பிளாக் மார்கெட் மூலம் ரத்தம் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தனியார் செய்திநிறுவனம் நடத்திய கள ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இதன் பின் இயங்கும் பெரிய மாஃபியாவின் இடைத்தரகர்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். ரத்தம் வேண்டி இருப்பவர்கள், முதலில் அணுகுவது ஹமிடியா மருத்துவமனை வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைதான்.

கள ஆய்வில் நோயாளிக்கு வேண்டியவர் போல் நடித்த செய்தியாளர் A+ ரத்தம் தேவைப்படுவதாக ஆட்டோ ஓட்டுநரிடம் கூறுகிறார். அதற்கு அவர், "கவலைப்படாதே. ராஜு அல்லது அசிம் பாயை அழைக்கவும். நாங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்வோம். ஒரு பாக்கெட் ரத்தம் 2,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நன்கொடையாளர் தேவையில்லை.

பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படும் ரத்தம்:

ரத்தத்தின் பாதுகாப்பு குறித்து விசாரித்தபோது, அதற்கு கடிந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர், "உங்களுக்கு ரத்தம் வேண்டுமா இல்லையா?" என கேட்டார். ரத்தம் வேண்டி கேட்ட எல்லா இடத்திலும் சொல்லப்பட்ட பெயர் அனீஸ். இந்த மாஃபியாவின் மாஸ்டர் மைண்ட்.

"டெலிவரி பாய்ஸ்", பார்க்கிங் உதவியாளர்கள் மற்றும் பார்மசிஸ்ட் வட்டாரங்களில் தனக்கு இருக்கும் தொடர்புகள் மூலம் செயல்பட்டு வருகிறார் அனீஸ். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் மேலும் கூறுகையில், "அனீஸ் பாய்கிட்ட பேசுங்க. அவர் எல்லாவற்றையும் சரிசெய்வார். போபாலில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் கூட, அவரிடமிருந்து ரத்தத்தைப் பெறுகின்றன" என்றார்.

அனீஸின் கூரியர் பாயாக செயல்படுபவர் அருண் மஹாவர் என்ற நபர். கள ஆய்வின்போது, மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த இவர், முகத்தை கைக்குட்டை போட்டு மூடி கொண்டு, ஹெல்மெட் அணிந்து வந்தார். முன்பணமாக ரூ.500 எடுத்துக்கொண்டு, ரத்தம் வாங்க சென்றார். 

நாட்டை உலுக்கிய மாஃபியா:

மாஃபியாவின் ஒரு அங்கமாக சோனு அஹிர்வார் என்பவர் ரத்தம் தருவதாக கூறி வந்தார். அவரிடம் விசாரித்தபோது, "நான் ரூ. 2,000க்கு ரத்தம் தருகிறேன். நான் இதற்கு முன்பு ஒருபோதும் ரத்தம் தானம் செய்ததில்லை. என் எடை? சுமார் 52 கிலோ.

அவர் மது அருந்தினாரா அல்லது சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாரா என்று கேட்டபோது, ​​பதில் சொல்ல மறுத்த அவர், "கொடையாளர் படிவத்தில் எந்த பெயரையும் நிரப்பினால் போதும். நான் உங்கள் உறவினர் என்று அவர்களிடம் சொல்லுங்கள்" என்று சொன்னார்.

இந்த ஒட்டுமொத்த மாஃபியாவின் முக்கிய ஆளாக இருக்கும் அனீஸ், "ஒரு ரத்த வங்கியில் பணிபுரிபவர்" என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் ஒரு மாஃபியா தாதாவைப் போலவே செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.