தேசிய வாக்காளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடுகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து இந்த நாளில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய, மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி அளவில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டி பிரதமர் மோடி நாடு முழுவதிலும் இருக்கும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான இளைஞர்களிடம் உரையாடுவார் என பாஜக இளைஞர் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இது தொடர்பான எக்ஸ் தள பக்கத்தில், “இன்று காலை 10.45 மணி பிரதமர் மோடி நாட்டில் இருக்கும் முதல் வாக்காளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், இது தொடர்பாக பா.ஜ.க யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ 3 வது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இளைஞர்களுக்கு இணையற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 


தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று பிரதமர் மோடி இளம் வாக்காளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட 5,000 ஒடங்களில் இருந்து லட்சக்கணக்கான் இளைஞர்கள் பிரதமர் உடனான உரையாடலில் இணைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர இந்தியத் தேர்தல் ஆணையம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை இன்று (25.01.2024) கொண்டாடுகிறது. புதுதில்லியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேர்தல் நிர்வாக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்' என்பதாகும்.