கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன. 


இதற்காக, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நாடு முழுவதும் பயணம் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன்விளைவாக, இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவானது. 


பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி:


இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிள் கூட்டம் பாட்னாவிலும் பெங்களூருவிலும் நடைபெற்றது. பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து எதிர்க்கட்சிகள் தலைவர்கள், இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர்.


இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பகீர் கிளப்பும் தகவல் ஒன்றை மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அதாவது, நாடாளுமன்ற பொதுத்தேர்தலை பாஜக முன்கூட்டியே நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


கட்சியின் இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "தேர்தல் பிரச்சாரத்திற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் பாஜக முன்பதிவு செய்துள்ளது. இதனால் வேறு எந்த அரசியல் கட்சியும் அவற்றை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியாது.


டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலா?


எனவே, மக்களவை தேர்தலை டிசம்பர் மாதத்திலேயே பாஜக நடத்தலாம். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்தால், நாட்டில் எதேச்சதிகார ஆட்சிதான் நடக்கும். பாஜக, ஏற்கனவே நமது நாட்டை சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் தேசமாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நம் நாட்டை வெறுப்பு நாடாக மாற்றிவிடும்" என்றார்.


இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. எனவே, இந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


மேற்குவங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் துத்தாபுகூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிய மமதா, "சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சில போலீசாரும் இதற்கு துணைபோகின்றனர்.


பெரும்பாலான காவலர்கள் தங்கள் கடமையை மிகுந்த நேர்மையுடன் செய்கிறார்கள். ஆனால் சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகிறார்கள். ராகிங் தடுப்புப் பிரிவு போலவே, வங்காளத்திலும் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.