அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது.
தேர்தல் பணியை தொடங்கிய பாஜக:
அடுத்தக்கட்டமாக தேர்தல் பணியை களத்திற்கு எடுத்து செல்ல உள்ளது பாஜக மேலிடம். அந்த வகையில், தேர்தல் வசதிக்காக 543 தொகுதிகளையும் மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்க தனித்தனியே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது பாஜக.
வடக்கு மண்டலத்தில் ஜம்மு - காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், குஜராத், டாமன் டையூ மற்றும் நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
மூன்று மண்டலங்களாக பிரித்துள்ள பாஜக:
வடக்கு மண்டலத்தில் இடம்பெற்ற மாநிலங்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. கிழக்கு மண்டலத்தில் பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், மேகாலயா, திரிபுர ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது. அதன் கூட்டம் ஜூலை 6ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.
கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மும்பை, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் தென் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த மண்டலத்திற்கான கூட்டம் ஜூலை 8ஆம் தேதி ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு உத்திகள்:
இக்கூட்டங்களில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அப்பகுதி அமைச்சர்களுடன் அந்த பகுதியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், அந்தந்த மாநிலங்களின் பொறுப்பாளர்கள், மாநில தலைவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை வலியுறுத்தும் வகையில், இந்த அனைத்து பகுதிகளுக்கும் வெவ்வேறு உத்திகளை பாஜக முடிவு செய்யும். இந்தக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகளின் பிளான்:
வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அதன் முதல் முயற்சியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் இதில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், ஜூலை மாதம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.