மகாராஷ்ட்ராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 26 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென  தீப்பிடித்தது. இந்த விபத்தில் இதுவரை 25 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால், நிலைதடுமாறி பேருந்து சாலையின் டிவைடரில் மோதி தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கவுள்ளதாக புல்தானா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். 


இந்த விபத்து குறித்து மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.