இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து, வாக்காளர் பட்டியலில் சதி செய்து பாஜக வாக்குகளை திருடுவதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ராகுலின் தாய் சோனியாவின் பழைய ரெக்கார்டுகளை எடுத்துள்ள பாஜக, குடியுரிமை பெறுவதற்கு முன்னரே, சோனியாவிற்கு ஓட்டுரிமை வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

சோனியாவிற்கு ஓட்டுரிமை - ஆதாரத்துடன் கேள்வி எழுப்பிய பாஜக

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய வாக்காளர்கள் பட்டியலில் சோனியா காந்தியின் பெயரை சேர்க்கும் முயற்சியில் தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்தினால் தான், தகுதி இல்லாத வாக்காளர்கள் மற்றும் சட்டவிரோத வாக்காளர்களை நீக்க வேண்டும் என்ற அக்கறையும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மீதான எதிர்ப்பும் ராகுலுக்கு வந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Continues below advertisement

மேலும், “சட்டத்திற்கு புறம்பாக இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 1980-ம் ஆண்டு அவர் இத்தாலி குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது“ என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அவர்களது அதிகாரப்பூர்வ இல்லமாக 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்ததாகவும், அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா, காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன என குறிப்பிட்டுள்ளார்.

1980-ம் ஆண்டு டெல்லி நாடளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டபோது, வாக்குச் சாவடி 145, எண் 388-ல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும், இது சட்ட மீறலாகும் என்று கூறியுள்ள அமித் மால்வியா, 1982-ல் இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, பின்னர் 1983-ல் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது பிரச்னை எழுந்து, சோனியா காந்திக்கு 1983 ஏப்ரல் 30-ம் தேதி தான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ஜனவரி 1, 1983 தேதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில், சோனியாவின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236-ல் இடம்பெற்றிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, 2 முறை வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன் என்று கூட நாங்கள் கேட்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, இது அப்பட்டமான தேர்தல் முறைகேடு இல்லையென்றால், வேறு என்ன.? எனவும் அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.