கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:


கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கு வட மாநிலங்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில் 90 சதவிகித தொகுதிகளை  பாஜகவே கைப்பற்றியிருந்தது.


ஆனால், வரவிருக்கும் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மன நிலை, புதிதாக உருவாகியுள்ள INDIA  கூட்டணி, விலைவாசி உயர்வு ஆகியவை பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும் என கூறப்படுகிறது. எனவே, வட மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரி கட்ட பாஜக திட்டமிட்டு வருகிறது.


அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு அதிக கவனம் அளித்து வருகிறது. சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், இவற்றை எல்லாம் சரிகட்ட பாஜக மேலிடம் முடிவு எடுத்துள்ளது. அதற்காக, திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 


வெகுண்டெழுந்த பாஜக மேலிடம்:


இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் பாஜகவினருக்கு பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, இதுகுறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது பாஜக. 


கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ள குழுவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, மும்பை நகரத்தின் முன்னாள் காவல் ஆணையர் சத்ய பால் சிங், ஆந்திர பிரதேச மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தமிழ்நாட்டுக்கு சென்று, பாஜகவினர் மோசமாக நடத்தப்படுவது பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நட்டா உத்தரவிட்டுள்ளார்.  


பொய் வழக்குகளை பதிவு செய்து பாஜகவினரை கைது செய்து வருவதாக திமுக அரசு மீது பாஜக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் இன்று கைது செய்தது.


கொடி கம்பம் அகற்றிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை காவல்துறை சமீபத்தில் கைது செய்தது. தென்காசியில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.