இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நட்டா:
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இச்சூழலில், கடந்த மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். குஜராத் மாநில மாநிலங்களவை உறுப்பினராக விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்பு இமாச்சல பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.
யார் இந்த நட்டா?
இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நட்டா, கடந்த 1960ஆம் ஆண்டு, டிசம்பர் 2ஆம் தேதி, பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ முடித்த பிறகு, ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்தார். தனது இளம் வயதில் ஜெய் பிரகாஷ் நாராயணின் பல்வேறு இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி) இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த 1989இல் ஏ.பி.வி.பி-யின் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991 இல், பாஜக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1993இல், அவர் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 1998இல் மீண்டும் சட்டரப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இமாச்சல பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சரானார்.
கடந்த 2010இல் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2012இல் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம், அவர் பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும், 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பாஜகவின் தேசியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.