நேற்று இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், நிலைமையை கட்டுக்குள் வைப்பது மற்றும் பொது சுகாதார துறை எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதை மதிப்பாய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.






கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 20 முக்கிய முருந்துகள், 12 இதர மருந்துகள், 8 இடையக மருந்துகள் மற்றும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மருந்தின் கையிருப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரதமரிடன் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டில் கடந்த சில நாட்களாக எச்1என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் மூலம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அது  குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா வதிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கேட்டு அறிந்தார்.


மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.   இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்  மற்றும் அடினோவைரஸ் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மாநிலங்களில் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  


கொரோனா பெருந்தொற்று தற்போது இல்லை என்றும், நாட்டில் கொரோனா பரவல் குறித்து தொடர் கண்காணிப்பு தேவையில்லை என்றும் பிரதமர்  மோடி எடுத்துரைத்தார்.  மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,134 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதே சமயம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,026 ஆக உள்ளது. சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா  மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.  


தினசரி தொற்று பாதிப்பு 1.09 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, வாராந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,98,118) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் விகிதம் 98.79 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,831 பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 92.05 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,60,279 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.