Vadodara: அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது என்பதை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்க உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 


பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்:


வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 26 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது.


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக வேட்பாளர்கள் சர்ச்சையில் சிக்கி போட்டியிலிருந்து பின்வாங்குவது தொடர் கதையாகி வருகிறது.


மேற்குவங்கம் அசன்சோல் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகரும் பாடகருமான பவன் சிங் போட்டியிலிருந்து பின்வாங்கிய நிலையில், உத்தர பிரதேசம் பாராபங்கி தொகுதி பாஜக வேட்பாளரான உபேந்திர சிங் ராவத்தும் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.


அதன் தொடர்ச்சியாக, குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வதோதராவில் அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் போட்டியிலிருந்து பின்வாங்கியுள்ளார். வதோதரா தொகுதியில் இந்த முறை சிட்டிங் எம்பி ரஞ்சன் பட்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.


குஜராத் பாஜக அதிர்ச்சி:


இச்சூழலில், சொந்த காரணங்களை சொல்லி போட்டியில் இருந்து விலகியுள்ளார் ரஞ்சன் பட். கடந்த இரண்டு தேர்தல்களில் வதோதராவில் பாஜக சார்பாக களம் கண்ட ரஞ்சன் பட், பெரும் வெற்றியை பதிவு செய்தார். ஆனால், இந்தமுறை ரஞ்சன் பட் மீது உள்ளூர் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


அவருக்கு எதிராக பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "மோடி, உங்களுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், ரஞ்சன், நாங்கள் உங்களை விட்டுவிட மாட்டோம். பெரும் வெற்றி பெறுவோம் என்ற உற்சாகத்தில் உள்ள பாஜக வேறு வேட்பாளரை நிறுத்துமா?" என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதுமட்டும் இன்றி, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு நகரத்தின் மீது அக்கறை இல்லை என விமர்சிக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


வதோதரா மாவட்டத்தில் உள்ள சவ்லி தொகுதியின் பாஜக எம்எல்ஏ தனது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் சங்கர் சவுத்ரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பின்னர் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். பின்னர், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலை சந்தித்து தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.


கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று வதோதரா. வாரணாசி, வதோதரா ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு, வதோதரா தொகுதி எம்பி பதவியை பிரதமர் மோடி ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் ரஞ்சன் பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.