பாஜக தலைவர்கள் சர்ச்சையான கருத்துகள் தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல. மூத்த தலைவர்கள் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை பலர், சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து சிக்கலில் மாட்டி கொள்வது உண்டு. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அவர்கள் பேசும் கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.


ஜனநாயகத்தின் கோயலில் பாஜக எம்பி செய்த செயல்:


இந்த நிலையில், ஜனநாயகத்தின் கோயில் என பிரதமர் மோடி வர்ணிக்கும் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஒருவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்று கொண்டிருந்தது.


அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டானிஸ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதூரி, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். தீவிரவாதி என குறிப்பிட்டு பேசினார். ரமேஷ் பிதூரி அருகில் அமர்ந்து, இதை கேட்டு கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சிரித்தார். இது, எதிர்க்கட்சி எம்பிக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த பாஜக எம்பிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரமேஷ் பிதூரிக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், "இத்தகைய நடத்தை தொடர்ந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


வருத்தம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:


பாஜக எம்பியின் செயலுக்கு நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "உறுப்பினர் கூறிய கருத்துக்களால் எதிர்க்கட்சியினர் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். ஆனால், அமைச்சரின் வருத்தம் போதாது என்றும் பாஜக எம்பியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இது முற்றிலும் 
வெட்கக்கேடான விஷயம். அரை மனதோடு ராஜ்நாத் சிங் மன்னிப்பு கோரியது ஏற்கத்தக்கது அல்ல. இது, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இடைநீக்கம் செய்வதற்கு சரியான வழக்கு. பிதூரியின் கருத்து ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும்" என்றார்.


பாஜக எம்பியின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, "அதை கேட்டு நான் வருத்தப்பட்டேன். ஆனால், ஆச்சரியப்படவில்லை. இதுதான் பிரதமரின் ‘வசுதைவ குடும்பக’த்தின் உண்மை நிலவரம்.


நாடாளுமன்றத்தில் எம்.பியை நோக்கியே இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக எந்த வகையான வார்த்தைகள் பயன்படுத்துவார்கள். ரமேஷ் பிதுரி குறித்து இதுவரை பிரதமரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை" என கேள்வி எழுப்பினார்.


இதையும் படிக்க: Actor Vishal: ’நீதிமன்றத்தை விட நீங்கள் ஒன்றும் பெரிய ஆள் இல்லை’ விஷாலை கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி