INDIA Bloc: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, I.N.D.I., கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய, I.N.D.I., கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பிரச்னைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் ஆன்லைன் சந்திப்பில் விவாதிக்க உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளனர்.  

டெல்லியில் கூடும் தலைவர்கள்:

ஆன்லைன் சந்திப்பு நடைபெறும் அதேநாளில், I.N.D.I., கூட்டணியின் நேரடி சந்திப்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே இல்லத்தில் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உத்தவ் மற்றும் ராஜ் தாக்ரே இணைந்து இருப்பதும், பாஜகவிற்கு எதிராக குரல் கொடுப்பதும் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

எப்படி களமிறங்கலாம்?

எதிர்வரும் மழைக்கால கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. ஜுலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதிலும் ரக்‌ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினத்திற்கான ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.  கூட்டத்தொடரின் போது பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இடையே அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை தானே தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது குறித்து காராசார விவாதங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகளின் இலக்கு என்ன?

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் சோனியா காந்தி இல்லத்தில் கூடினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் பிரமோத் திவாரி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், கே. சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, விவசாயிகளின் குறைகள், வேலைவாய்ப்பின்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, அரசாங்கத்தால் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளது.