ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வாங்க.. என்று புதுச்சேரியில் சட்ட தின விழா மேடையில் பேசிய பாஜக எம்எல்ஏ அசோக்பாபு அரங்கிலிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தார்.
அரசியல் என்றால் பேச்சு. தலைவன் என்றால் வீர உரை. இதுதான் அடையாளம். ஆனால், இன்றைய அரசியல் அப்படியிருக்கிறதா என்றால் இல்லை. மேடையேறி சரளமாகப் பேசும் தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் சூழல் தான் இருக்கின்றது. தமிழகம், புதுச்சேரி என எங்கும் இதற்கு விதிவிலக்கல்ல.
அதை நிரூபித்திருக்கிறார் பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு.
விழாவில் அவர் பேசுகையில், "மத்தியில் ஆளும் பிரதமரும், புதுச்சேரி முதல்வரும் ஞானிகள். இருவருமே தீர்க்கதரிசிகள். இருவருக்குமே நாடு நல்லா இருக்கணும். மக்கள் நல்லா இருக்கணும். இதைத் தவிர வேறு தெரியாது. இதைத் தான் ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வார்கள்" என்று குறிப்பிட்டார்.
அவ்வளவுதான் அரங்கமே வெடித்துச் சிரித்தது. ஒளவையார் எழுதியது ஆத்திசூடி என்று அரங்கில் இருந்தவர்கள் எடுத்துக் கொடுத்தனர்.
சற்றே சுதாரித்துக் கொண்ட எம்எல்ஏ, "ஒளவையார் எழுதியது ஆத்திசூடி என்பது தெரியும். ஒளவையார் சொன்னது வேறு. நான் சொல்ல வந்தது வேறு. நான் சொல்வதை முழுசா கேட்டால் சரியாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். இதுதான் சமாளிப்பா என்று நினைத்த மக்கள் மீண்டும் அரங்கத்தில் சிரிப்பலையைப் பாய்ச்சினர்.
ஒரு மாநிலத்தின் சட்டத்தை உருவாக்கும் சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்ட நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவ்வையார் திருக்குறள்ல சொல்வாங்க என பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார்!
இப்படித்தான் ஆப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசியபோது, கம்பராமாயணத்தை தந்த சேக்கிழார் என்று கூறி ஒரு பெருங்கூட்டத்தையே அதிர வைத்தார். கம்பராமாயணத்தை எழுதியது கம்பர் என்பது பள்ளிக் குழந்தையும் கூட சொல்லும் சேதி. சேக்கிழார் எழுதியது பெரிய புராணம் ஆகும். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சை சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வேகமாகப் பரவி அப்போது நெட்டுலகை அதிர வைத்தது.
இன்னும் பலரும் பலவிதமாகப் பேசி சிரிப்பூட்டிய நிகழ்வுகளும் உண்டு. ஒருமுறை அப்போதைய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், நேற்றுக்கூட முதல்வர் எடப்பாடி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துவிட்டு வந்தார் என்று கூறினார். ஒரு நாட்டின் பிரதமரைக் கூட மறந்து பேசிய சம்பவம் மீம் க்ரியேட்டர்ஸுக்கு கொண்டாட்டமானது.
இதேபோல், திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற தொடக்கத்தில் அவர் மேடைகளில் தாளில் எழுதிவைத்துப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.