அயோத்தியின் மேயர், உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ மற்றும் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 40 பேர் அயோத்தியில் சட்டவிரோதமாக மனைகளை விற்பனை செய்ததாகவும், நிலத்தில் உள்கட்டமைப்புகளை கட்டியதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா ஆகியோர் தாங்கள் நிரபராதி என்றும், சம்மந்தபட்ட ஆணையத்தால் வெளியிடப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் சதி நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் விஷால் சிங் ஞாயிற்றுக்கிழமை அன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "ஆணையத்திற்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக நிலம் வாங்கி, விற்பனை செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட 40 பேரின் பட்டியலை ஆணையம் சனிக்கிழமை இரவு வெளியிட்டது. 40 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பட்டியலில் சதி நடந்திருப்பதாக கூறியுள்ள மேயர் உபாத்யாய் மற்றும் எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளோம் என விளக்கம் அளித்துள்ளனர். மில்கிபூரின் முன்னாள் பாஜக எம்எல்ஏவான கோரக்நாத் பாபாவின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அயோத்தியில் சட்ட விரோதமாக நிலம் வாங்குதல், விற்பனை செய்ததாக மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பின. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு உள்ளூர் எம்பி லல்லு சிங் கடிதம் எழுதியிருந்தார்.
பட்டியல் வெளியானதையடுத்து, விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில், "அயோத்தியில் பாஜகவினர் செய்த பாவம்! பாஜவின் மேயர், உள்ளூர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர், நில மாபியாக்களுடன் இணைந்து, சட்டவிரோத காலனிகளை நிறுவி வருகின்றனர்.
இதில் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, 30 சட்ட விரோத காலனிகள் அமைக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்