கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும் அதனால்தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட்டனர் என்றும் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிதேஷ் ரானே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இப்படி பேசுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தை விமர்சித்தும் அந்த மாநில மக்கள் மீது வெறுப்பை பரப்பும் வகையிலும் பாஜக தலைவர்கள் பேசி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
கேரளாவுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரமா?
குறிப்பாக, கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பசுவதை நடப்பதால்தான் கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது என கூறி சர்ச்சையை கிளப்பினார் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா.
அதன் தொடர்ச்சியாக, கேரளாவை மினி பாகிஸ்தான் என குறிப்பிட்டுள்ளார் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிதேஷ் ரானே. இவர், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானேவின் மகன் ஆவார்.
"கேரளா ஒரு மினி பாகிஸ்தான் அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் உண்மை. தீவிரவாதிகளை அழைத்துச் சென்று எம்.பி.யாகிவிட்டனர்" என நிதேஷ் ரானே பேசியிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து:
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், "நிதேஷ் ரானேவிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதைச் செய்ய மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை நான் கேட்க விரும்புகிறேன்.
அமைச்சராக இருக்கும் நபர் (நிதேஷ் ரானே), இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை (பேணி காப்பேன் என) அரசியலமைப்பின் உறுதிமொழியை எடுத்துள்ளார். இப்போது, அவர் நாட்டின் மாநிலங்களில் ஒன்றை பாகிஸ்தான் என்று முத்திரை குத்துகிறார். அங்குள்ள வாக்காளர்களை 'பயங்கரவாதிகள்' என்று அழைக்கிறார். அமைச்சர் பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இருக்கிறதா? இதுதான் நான் கேட்க விரும்பும் கேள்வி? என விமர்சித்துள்ளது.
பின்னர், விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் நிதேஷ் ரானே, "கேரளா இந்தியாவின் ஒரு பகுதிதான். ஆனால், அங்கு நிகழும் "லவ் ஜிஹாத்" மற்றும் மத மாற்றங்களால்தான் அப்படி ஒப்பீடு செய்தேன்" என்றார்.