தெலங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பாஜக தலைவராக புரந்தேஸ்வரியும், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாஹரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் கிஷன் ரெட்டி பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருவது கிட்டதட்ட ஊர்ஜிதமாகியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வரும் பாஜக, மாநில பாஜக தலைவர்களை நியமனம் செய்து கட்சியின் வலிமையை மேலும் அதிகரித்து வருகிறது. இதன்படி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெலுங்கானா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, மத்திய அமைச்சரவையிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருந்த போதிலும் கிரண் ரிஜிஜு சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு சட்ட அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க