மத்தியப் பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட மகன்களை கொன்றுவிட்டு உள்ளூர் பாஜக தலைவரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னாள் பாஜக கவுன்சிலரான சஞ்சீவ் மிஸ்ரா (45), தனது மனைவி நீலம் (42), மகன்கள் அன்மோல் (13) மற்றும் சர்தக் (7) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஆனால், இரு மகன்களும் அரிதான மரபணு நோயாக கருதப்படும் தசைநார் தேய்வால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.


இதனால், சஞ்சீவ் மிஸ்ராவும் அவரது மனைவியும் மன அமைதி இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். இச்சூழ்நிலையில், சஞ்சீவ் மிஸ்ரா நேற்று மாலை 6 மணி அளவில் ட்விட்டரில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கடவுள் தனது எதிரியின் குழந்தைகளுக்குக் கூட குணப்படுத்த முடியாத டச்சேன் தசைநார் சிதைவு (டிஎம்டி) நோயைக் கொடுக்கக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவை படித்தவுடன், அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் பன்டி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். அங்கு மிஸ்ரா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் பேச்சு மூச்சி இன்றி கண்டெடுக்கப்பட்டனர். நான்கு பேரும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மாவட்ட ஆட்சியர் உமாசங்கர் பார்கவா, "மிஸ்ராவின் மகன்கள் தசை சிதைவு என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குணப்படுத்த முடியாதது என்று கூறப்படுகிறது. தற்கொலைக் கடிதத்தில், தனது மகன்களைக் காப்பாற்ற முடியாததால், தான் வாழ விரும்பவில்லை என்று மிஸ்ரா கூறியுள்ளார்.


மிஸ்ரா, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் சல்பாஸ் மாத்திரைகளை சாப்பிட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என்றார்.


இதுகுறித்து கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் யாதவ் கூறுகையில், "வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.


இந்த செய்தி, கிராம மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்கொலைக்கு உடலியல், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்து காரணங்கள் இருக்கின்றன. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதைப்போல், தற்கொலைக்கான காரணத்தை அறிய உளவியல் ரீதியான ஆய்வு நடத்த வேண்டும். 


எந்த விதமான பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது. 


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம்: 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050