பாஜகவில் நிர்வாகிகள் தொடங்கி மூத்த தலைவர்கள் வரை, சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு கூட, நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டிய மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, "அமைதியாக இல்லாவிட்டால் அமலாக்கத்துறை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன்" என தெரிவித்தார்.


தொடர் சர்ச்சையில் சிக்கும் பாஜக தலைவர்கள்:


வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களை ரவுடிகள் என இதே மீனாட்சி லேகி தெரிவித்தபோது, அதற்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. சரத் பவாரின் மகன் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிரா மாநில முன்னாள் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், வீட்டுக்கு சென்று சமையுங்கள் என சொன்னது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கடந்தாண்டு, பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து தெரிவித்த கருத்து வளைகுடா நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை சுட்டு கொலை செய்யுங்கள்" என கூறியது பரபரப்பை கிளப்பியிருந்தது.


"உயிர எடுக்க தயங்க மாட்டேன்"


அதன் தொடர்ச்சியாக, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா, "நாட்டுக்கு எதிரான பேசினால் உயிரை எடுக்க தயங்க மாட்டேன்" எனக் கூறி, சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பாங்க்ரோட் கிராமத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசிய அவர், "நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பாரத் மாதா கி ஜெய் என்று கூறுபவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள். அவர்களுக்காக நாம் நம் உயிரையும் கொடுக்கலாம். ஆனால், பாரத மாதாவுக்கு எதிராகப் பேசுபவர்கள், அவர்களின் உயிரைப் பறிக்க தயங்க மாட்டோம்" என்றார்.


அயோத்தி செல்லுங்கள்:


காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, "உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என்று அக்கட்சியினர் கேலி செய்து வந்தனர். பகவான் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என சொல்பவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களைத் துடைக்க, ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய உள்ள ஜனவரியில் அயோத்திக்குச் செல்ல வேண்டும்" என்றார்.


காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டியதற்காக மத்திய அரசை பாராட்டி பேசிய அவர், "காஷ்மீர் எப்படி அமைதியற்ற இருந்தது. அங்கு எப்படிப்பட்ட நிலைமை நிலவியது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது, ​​அங்குள்ள ஒவ்வொரு வீட்டின் மீதும் மூவர்ணக் கொடி ஏற்றப்படுகிறது" என்றார்.