அக்னிபாத் சிறப்பு ராணுவத் திட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வார்கியாவின் சர்ச்சைக்குரிய கருத்தைப் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சித்து வரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மௌவா மொய்த்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் `பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாவலர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நான் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை தருவேன்’ எனக் கூறியுள்ளார் பாஜக தேசியச் செயலாளர். ஆம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வில்லனைத் தேர்ந்தெடுக்க நினைத்தால், இந்திய மக்கள் உங்களையே தேர்ந்தெடுப்பார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 18 அன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, `ஒரு அக்னிவீரர் பயிற்சி முடிந்து, பாதுகாப்புத் துறையில் தனது 21 முதல் 25 வயது வரை செலவிட்டு, நான்கு ஆண்டுகளைக் கழித்து வரும் போது அவரிடம் 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரை `அக்னீவீரர்’ என்று அழைப்பார்கள்.. பாஜக அலுவலகத்திற்குப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்றால், நான் அக்னிவீரர்களுக்கே முன்னுரிமை வழங்குவேன்’ எனக் கூறியிருந்தார். இது எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரின் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவரான ஜெய்ராம் ரமேஷ், பாஜக தலைவரான வருண் காந்தி ஆகியோர் விஜய்வார்கியாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி மொழியில், `சுதந்திரத்திற்குப் பிறகு 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாதவர்களை ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்துமாறு எதிர்பார்க்க முடியாது. நாட்டைக் காப்பாற்றவே இளைஞர்கள் ராணுவத்தில் இணைகின்றனர்.. பாஜக அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அல்ல.. இதில் பிரதமரின் மௌனம் என்பது இந்த அவமானத்தின் மீதான குறியீடு’ எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவர் வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில், `ராணுவத்தின் பெருமையைப் பறைசாற்ற சொற்களைத் தேடினால் அகராதியில் கூட மிகக் குறைவாகவே இருக்கும்.. இப்படியான பெருமைமிக்க ராணுவ வீரரை அரசியல் கட்சியில் காவலர் பணியாற்றக் கூறுவோருக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவு செய்துள்ளார்.
தனது கருத்துகளை `டூல்கிட்’ கும்பலைச் சேர்ந்தவர்கள் திரித்துவிட்டதாகக் கூறும் கைலாஷ் விஜய்வார்கியா, `அக்னீபாத் திட்டத்தை முடித்த பிறகு, அக்னிவீரர்கள் பயிற்சியில் திறம்பட இருப்பதோடு, பணியில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். எனவே அவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பாக பணியாற்ற முடியும்.. இந்தப் பொருளில் தான் நான் அவ்வாறு கூறினேன்’ என விளக்கம் தந்துள்ளார்.
இவை ஒரு பக்கம் இருக்க, அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான பாரத் பந்த் ஊரடங்கு போராட்டங்கள் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.