கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த நாட்டையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது. பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இருந்த போதிலும் மக்களை சரியான நேரத்தில் காப்பாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


சர்ச்சையை கிளப்பும் பாஜக மூத்த தலைவரின் கருத்து: கடுமையான சூழலுக்கு மத்தியில் இந்திய ராணுவத்தினரும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை வீரர்களும் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கேரள நிலச்சரிவு குறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கியான்தேவ் அஹுஜா சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.


பசுவதை நடப்பதால்தான் கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன் என்றும் பசுவதையை தடுத்து நிறுத்தும் வரையில் அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.


நிலச்சரிவுகள், பசுவதையால் ஏற்படுகிறதா? 


ஆனால், அவை இந்த அளவிலான பேரழிவுகளை விளைவிப்பதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பசு வதையில் ஈடுபடும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதை நாங்கள் அவதானித்து வருகிறோம். பசு வதையை நிறுத்தாவிட்டால் கேரளாவில் இதுபோன்ற அவலங்கள் தொடரும்" என்றார்.


பாஜக முன்னாள் எம்எல்ஏவின் இந்த கருத்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மனசாட்சி துளியும் இன்றி அவர் இப்படி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில்தான், மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்த தடமே தெரியாமல் மண்ணில் புதைந்துள்ளன. காணாமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்த மீட்பு பணிகள் நல்ல முன்னேற்றம் கண்டதற்கு, ராணுவத்தால் கட்டமைக்கப்ப்பட்ட பெய்லி எனப்படும் தற்காலிக பாலம் முக்கிய காரணமாகும். மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான, சீதா அசோக் என்ற பெண் அதிகாரி தான் இந்த பாலத்தை கட்டமைக்கும் பணிகளை வழிநடத்தியுள்ளார்.