கான்பூரில் பெண் நண்பருடன் மாட்டிக் கொண்டு, மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களால் தாக்கப்பட்ட பண்டேல்கண்ட் பகுதி பாஜக செயலாளரான மோஹித் சோங்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாஜக மாநில பொதுச்செயலாளரும் தலைமை அலுவலக பொறுப்பாளருமான கோவிந்த் நரேன் சுக்லா இதுகுறித்து கூறுகையில், "சோங்கரின் தவறான நடத்தைக்காக கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்" என்றார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர், அமைப்பு செயலாளர் , மண்டலத் தலைவர், மாவட்டத் தலைவர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
சனிக்கிழமை இரவு நடுரோட்டில் அவரது பெண் தோழியுடன் காரில் சென்ற சோங்கரை அவரது மனைவி, மாமியார் மற்றும் மனைவியின் உறவினர்கள் செருப்பால் அடித்தனர். ஞாயிற்றுக்கிழமை போலீசார் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தனர். ஒன்று சோங்கருக்கு எதிராகவும் மற்றொன்று அவரது பெண் நண்பருக்கு எதிராகவும், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் செய்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறி இந்திய தண்டனை சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் வைரலான இந்த சம்பவத்தின் வீடியோவின் அடிப்படையில் போலீசார் சோனகரை கைது செய்துள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக சோங்கர் கைது செய்யப்பட்டதாக ஜூஹி காவல் நிலைய ஆய்வாளர் ஜிதேந்திர சிங் கூறினார்.
சனிக்கிழமை மாலை நகரின் ஜூஹி பகுதியில் சோங்கரும் அவரது பெண் நண்பரும் காருக்குள் இருப்பதை அவரது மனைவி மற்றும் மாமியார்கள் கண்டதாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர், சோங்கரின் மனைவி மற்றும் அவரது மாமியார் அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதன்பிறகு, சோங்கரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை உள்ளூர் காவல் நிலையம் வரை சென்றது. சோங்கர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் தம்பதியினருக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.