திருப்பத்தூர் (Tirupattur News) வாணியம்பாடி அருகே சாலைப்பணிக்காக பள்ளி மைதானத்தில் குட்டை  போல் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளான ராஜலட்சுமி (9 ஆம் வகுப்பு)  மற்றும் மோனிகா (5 ஆம் வகுப்பு) நண்பர்களான இவர்கள் இன்று கடைக்கு சென்று வீடு திரும்பிய போது அப்பகுதியில் சாலை பணிக்காக அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் குட்டை  போல் தோண்டப்பட்ட 12 அடி பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக பள்ளத்தில்  விழுந்து உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவிகள் வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பாததால். மாணவிகளின்  பெற்றோர்கள் மாணவிகளை உறவினர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் என பல இடங்களை தேடியுள்ளனர்.




 


மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு


பின்னர் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர்கள் அதே பகுதியில் இருந்த  பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி தேடிய போது 2 மாணவிகளும் பள்ளத்தில்  மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.  மேலும் இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் இரண்டு மாணவிகளின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கடைக்குச்சென்ற பள்ளி மாணவிகள் சாலைப்பணிக்காக பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி  மாணவர்களின் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




 


இது குறித்து சிக்கனாகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஜலட்சுமி  கேட்ட போது  சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் என்றும், சுற்று சுவர் எழுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  இது குறித்து ஊராட்சி செயலாளர் தேவனிடம் கேட்டபோது; பள்ளி வளாகத்திற்காக தனியார் ஒருவர் கொடுக்கப்பட்ட நிலம்  என்றும் அந்த பகுதியில் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் சாலை பணிக்காக மட்டும் தோண்டப்பட்டதாகவும், சுற்று சுவர் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். அங்கு அமைக்கப்படும் சாலை 440 மீட்டர் தொலைவிற்கு போடப்பட்டு வரும் சாலை 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இடம் கேட்டபோது உடனடியாக பள்ளி சுற்றுச்சுவர் பணிகளை முடித்து நாம் மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.