தேவைக்கு அதிகமாக பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு பற்றியம் விளம்பரம் செய்யப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, திட்டங்களை காட்டிலும் பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


விளம்பரம் செய்வதற்காக பொது மக்களின் வரி பணமே செலவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இச்சூழலில், விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.


இதற்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017-18 முதல் 2022ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி வரை, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரம் செய்வதற்காக 2,355 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ததற்காக 1,829.18 கோடி ரூபாயும் தொகைக்காட்சிகளில் விளம்பரம் செய்ததற்காக 525.93 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைப்பு (சிபிசி) அரசுத் துறைகளுக்கான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.


மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் நாரம்பாய் ஜே. ரத்வா எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், "2020-21 ஆண்டில் செய்தித்தாள்களில் சிபிசி-ஆல் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான மொத்த செலவு 197.49 கோடி ரூபாய். 


டிவி சேனல்களில் விளம்பரம் செய்ததற்காக 69.91 கோடி செலவாகியுள்ளது. 2021-22இல் மட்டும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ததற்காக 179.04 கோடி ரூபாயும் டிவி சேனல்களில் விளம்பரம் செய்ததற்காக 29.30 கோடி ரூபாயும் செலவு ஏற்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நடிமுல் ஹக் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், "கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிசி-ஆல் வழங்கப்பட்ட விளம்பரங்களின் மொத்த எண்ணிக்கை 5,727 (2019-20), 6,085 (2020-21) மற்றும் 6,887 (2021-22) ஆகும்.


 






2019-20 ஆண்டில், 199 சேனல்களிலும் 2020-21 ஆண்டில் 182 சேனல்களிலும் 2021-22 ஆண்டில் 177 சேனல்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.