சமீப காலமாகவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதும் தனி கட்சி தொடங்கியும் வருகின்றனர்.


அதில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், ஜெய்வீர் ஷெர்கில் ஆகியோருக்கு பாஜகவில் பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளது.


காந்தி குடும்பத்திற்கு எதிராக கடும் கருத்துக்களை தெரிவிட்டு, காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த ஜெய்வீர் ஷெர்கிலுக்கு மூன்று மாதங்களில் செய்தித் தொடர்பாளர் பதவியை வழங்கியுள்ளது பாஜக.


பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ஆகியோர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


உத்திரபிரதேச அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங், உத்தரகாண்ட் முன்னாள் பாஜக தலைவர் மதன் கௌசிக், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராணா குர்மீத் சிங் சோதி, பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மனோரஞ்சன் கலியா ஆகியோரும் தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


காந்தி குடும்பத்தை விமர்சித்திருந்த ஷெர்கில், "கட்சியில் முடிவெடுப்பவர்களின் பார்வை, இளைஞர்களின் அபிலாஷைகளுடன் தற்போது ஒத்திசைவில் இல்லை. அவர்களின் சினம் காங்கிரஸை கரையான்கள் போல் தின்னும்.


செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர் இதுகுறித்து விரிவாக பேசுகையில், "சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஒரு வருடத்திற்கும் மேலாக என்னை சந்திக்க மறுத்துவிட்டனர். எனவே கட்சியின் தொடர்பை முற்றிலுமாக முறித்து கொண்டேன்" என்றார். காங்கிரஸ் கட்சியின் இளம் முக்கிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக ஜெய்வீர் ஷெர்கில் இருந்து வந்தார்.


ஆகஸ்ட் மாதத்தில், ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் ஆகிய இரண்டு முக்கிய தலைவர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களில் தங்களின் கட்சி பதவிகளை ராஜிநாமா செய்தனர்.


கடந்த ஆண்டு, நவம்பரில் காங்கிரஸில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இந்த ஆண்டு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய கட்சியைத் அவர். தொடங்கினார். ஆனால், இறுதியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதை பாஜகவுடன் இணைத்தார். சுனில் ஜாகர் மே மாதம் கட்சியில் இருந்து விலகினார்.


கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் தோல்விகள் காரணமாக காங்கிரஸ் பல தலைவர்களை இழந்துள்ளது. இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உத்தர பிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோர் 2020இல் வெளியேறியதை தொடர்ந்து பல முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர்.


இந்த ஆண்டு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், அஸ்வனி குமார், ஆர்.பி.என்.சிங் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.