டெல்லியில் ஆட்சி அமைத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு 21,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். இதை தவிர, முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது 5 ரூபாய் நிதி உதவியும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால், அங்கு அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
பெண்களுக்கு அள்ளி கொடுக்கும் பாஜக:
டெல்லியை பொறுத்தவரையில், சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் இணைந்து களம் கண்ட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலை தனித்தனியே சந்திக்கின்றன. இவர்களை தவிர மத்தியில் ஆளும் பாஜக இந்த இரண்டு கட்சிகளும் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய தலைநகரில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி பல்வேறு சமூக நல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், கர்ப்பிணி பெண்களுக்கு 21,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, "பாஜகவின் சமூக நலத்திட்டங்களில் பெண்கள்தான் மையமாக உள்ளனர். ஏற்கனவே இருக்கும் நலத்திட்டங்கள் அப்படியே தொடரும்.
டெல்லியில் வெற்றி யாருக்கு?
முதல் குழந்தைக்கு ரூ. 5,000 வழங்கப்படும். இரண்டாவது குழந்தைக்கு ரூ. 6,000 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 21,000 வழங்கப்படும். இதை தவிர, ஆறு சத்துணவுப் பெட்டிகள் வழங்கப்படும். மஹிலா ஸ்மிருதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவி வழங்கப்படும்.
ஆம் ஆத்மி 2021 ஆம் ஆண்டு பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால், அக்கட்சி தனது வாக்குறுதிகளை பஞ்சாபிலும் நிறைவேற்றவில்லை. டெல்லியிலும் நிறைவேற்றவில்லை. எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசு 500 ரூபாய் மானியம் வழங்கும். தீபாவளி மற்றும் ஹோலி தினங்களில் மக்களுக்கு இரண்டு இலவச சிலிண்டர்களும் வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள், கூடுதலாக ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவார்கள். இதன்மூலம், முதியோர்களுக்கு வழங்கப்படும் மொத்த மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும்" என்றார்.