கடந்த 2019ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்த சட்டம் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்ட வடிவு பெறுவதற்கு முன்பு மசோதா கொண்டு வரப்பட்ட சட்டமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதே நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தன.
எதிர்ப்பு ஏன்?
குடியுரிமை சட்டம், 1955 திருத்தப்பட்டே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்தின் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டு ஒடுக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியா வந்திருக்க வேண்டும் என்பது சட்டத்தின் நிபந்தனை.
இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சி இது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தியாவுக்கு மேற்குறிப்பிட்ட நாடுகளின் இருந்து இஸ்லாமியர்கள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு இச்சட்டத்தின்படி குடியரிமை வழங்கப்படாது.
எனவே, மதத்தை அளவுகோலாக வைத்து குறிப்பிட்ட மத பிரிவினருக்கு பாகுபாடு காட்டப்படுவதாக இதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆன பிறகும், பல்வேறு காரணங்களால் இது அமலுக்கு வரவில்லை.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இச்சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். அதேபோல, சட்டத்தின் விதிகள் உருவாக்கப்படாமல் உள்ளதால், இன்னும் யாருக்கும் இதன் கீழ் குடியுரிமை வழங்கப்படவில்லை.
இச்சட்டத்தை எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம். இந்நிலையில், மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மேற்குவங்க சட்டபேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளார். முடிந்தால் சட்டத்தை அமலாவதில் இருந்து நிறுத்த காட்டுமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தாவுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தாக்கூர்நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "சட்டப்பூர்வ ஆவணங்களுடன் ஒருவர் நேர்மையான குடியிருப்பாளராக இருந்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இதையே, குடியரிமை திருத்த சட்டம் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை விவாதித்துள்ளோம். இது மாநிலத்தில் விரிவுபடுத்தப்படும். உங்களுக்கு தைரியம் இருந்தால், அதை நிறுத்துங்கள்" என்றார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை பொருத்தவரையில், வங்கதேசத்தை பிறப்பிடமாக கொண்ட மாதுவாஸ் சமூகத்தின் அதிகம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சமூகமான மாதுவாக்கள் பாஜக மற்றும் திரிணாமுல் முகாம்களாக பிளவுபட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் 30 லட்சம் மாட்டுவாக்கள் உள்ளதால், நாடியா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஐந்து மக்களவைத் தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 50 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அச்சமூகம் செல்வாக்கு பெற்றுள்ளது.