பாஜகவின் 80 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார். அதில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மற்றும் அவரது மகன் வருண் காந்தி ஆகிய இருவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர் மிஸ்ரா, துணை முதல்வருக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுகள் மீது கார் ஏற்றிக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு காரணமாக கூறப்படும் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா இன்னும் கைது செய்யப்படவில்லை
முன்னதாக, புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றிற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியபோதே விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வந்தார் வருண் காந்தி. இந்நிலையில் லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்தார்.மேலும் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்படும் வீடியோவையும் அதனோடு இணைத்து பதிவிட்டிருந்தார். அதில், “வீடியோ மிகத் தெளிவாக இருக்கிறது. கொலை செய்வதன் மூலம் போராட்டக்காரர்களின் வாயை அடைக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமாணவர்களை நீதி முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியை நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில்தான் தற்போது நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பட்டியலிலிருந்து வருண்காந்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய அவரது தாய் மேனகா காந்தி, மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் சுப்ரமணியன் சுவாமியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 7-ம் தேதி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்தப்பட்டியலில் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, மூத்த தலைவர்கள், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகிய 80 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.