அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், பல சர்ச்சைக்குரிய சிட்டிங் எம்பிக்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, வெறுப்பை தூண்டும் விதமாக பேசிய எம்பிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த வகையில், பிரக்யா தாக்கூர், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா மற்றும் ரமேஷ் பிதுரிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர்.


பிரக்யா தாக்கூர்:


மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் பிரக்யா தாக்கூர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக உள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி பிணை பெற்ற இவர், கபடி, கர்பா நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


குறிப்பாக, மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா தாக்கூர் புகழ்ந்தது தேசிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதை பிரதமர் மோடி கண்டிக்கும் அளவுக்கு பிரச்னை வெடித்தது. "காந்தி அல்லது நாதுராம் கோட்சே பற்றி கூறப்படும் கருத்துக்கள் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவை. மிகவும் தவறானவை. அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், என்னால் அவரை முழுமையாக மன்னிக்கவே முடியாது" என பிரதமர் மோடி எதிர்வினையாற்றியிருந்தார்.


பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா:


மேற்கு டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா. இரண்டு முறை எம்பியும் முன்னாள் டெல்லி முதலமைச்சருமான மறைந்த சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ், தனது தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். ஆனால், வெறுப்பை தூண்டும் விதமாக பேசியது இவருக்கு வினையில் முடிந்துள்ளது.


கடந்த 2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஷாஹீன் பாக் போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பர்வேஷ் வர்மா, டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்படுவார்கள் எனக் கூறினார்.


கடந்த 2022ஆம் ஆண்டு, இஸ்லாமியர்கள் குறித்து பேசிய பர்வேஷ் வர்மா, "அவர்களை எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு உங்களின் நிலையை புரிய வைக்க நினைத்தால், அதற்கு ஒரே தீர்வு அவர்களை புறக்கணியுங்கள்" என்றார்.


ரமேஷ் பிதுரி:


தெற்கு டெல்லி மக்களவை உறுப்பினராக இருப்பவர் ரமேஷ் பிதுரி. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின்போது, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலியை நோக்கி இவர், கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அவரை தீவிரவாதி என குறிப்பிட்டு பேசினார். மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய ரமேஷ் பிதுரியை பதவி நீக்கம் செய்யக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.


மீனாட்சி லேகி:


மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, புது டெல்லி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். சமீபத்தில், கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பும்படி கூட்டத்தை நோக்கி மீனாட்சி லேகி வலியுறுத்தினார். தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட்டத்தில் இருந்த சிலர் கோஷம் எழுப்பவில்லை. இதனால், மீனாட்சி லேகி கோபம் அடைந்தார். ஒரு கட்டத்தில், உச்சக்கட்ட கடுப்பான அவர், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியேறும்படி அதட்டினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.