பாலியல் தொழிலாளிகள் மறுவாழ்வு தொடர்பான மசோதா ஒன்றை நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கான ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யப்படும் என அரசு தகவல் அளித்துள்ளது. இதனை அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சூரி உச்சநீதிமன்றத்தில் தெரியப்படுத்தினார்.
பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எல்.என்.ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது. விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய அமர்வு ‘கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்களிடம் அவர்களது அடையாள அட்டை விவரம் எதுவும் கேட்காமல் அவர்களுக்கான ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் பாலியல் தொழிலாளி என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
இதுகுறித்துக் கருத்து கூறியுள்ள அமர்வு, ‘அரசியல் சட்டப்பிரிவு 21ன் கீழ் உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை. கொரோனா பெருந்தொற்று தொடர்பான அச்சம் மக்களிடையே சற்று தனிந்திருந்தாலும் இதுபோன்ற இக்கட்டான காலங்களில் அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்காமல் நிறைவேற்றுவது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கடமை. இதன் அடிப்படையில் பாலியல் தொழிலாளர்களுக்கு அந்தந்த அரசுகள் ரேஷன் பொருட்களைக் குறையின்றி வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.2010ல் தனியார் அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.மேலும் அரசின் இந்த மசோதா வரைவை அரசைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷனிடம் சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் சூரிக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அமர்வு குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றையாவது அரசு நிறைவேற்றுகிறதா என்பதைக் கண்காணிக்கவே இந்த நடவடிக்கை எனவும் அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களுக்கு ரேஷன் கிடைப்பதில் சிக்கலாக இருப்பதாக டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் புகார் எழுப்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து.