குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு:


கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.


இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பாக பல முக்கிய கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.


மற்ற வழக்குகளை போல தண்டனை ரத்து விதிகளுக்கு உட்பட்டு பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல, இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த விசாரணையில் சமர்பிக்க வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு:


"தண்டனை நிவாரணம் இன்றி கைதிகள் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல கொலை வழக்குகள் நம் முன் உள்ளன. மற்ற வழக்குகளை போன்றே இந்த வழக்கில் விதிகள் பின்பற்றப்பட்டதா?" என நீதிபதிகள் தெரிவித்தனர்.


கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தின்போது டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார். 21 வயதான பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை வேறு இருந்தது. 


பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்தின் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, மார்ச் 3ஆம் தேதி, ஷபர்வாட் என்னும் கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை கொடூரமாக சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல். 


கர்ப்பிணியான பில்கிஸ், அவரது அம்மா உள்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 7 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.