Bilkis Bano: பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், 11 பேரும் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த குற்றவாளிகள்:
பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா துணைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனர். குஜராத் அரசால் முன்கூட்டியே அவர்கள் விடுவிக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. அதோடு, ஜனவரி 21ம் தேதிக்குள் குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கெடு முடிவடையவிருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைந்துள்ளனர். அதைதொடர்ந்து, குற்றவாளிகளான பகாபாய் வோஹானியா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, கோவிந்த் நாய், ஜஸ்வந்த் நாய், மிதேஷ் பட், பிரதீப் மோர்தியா, ராதேஷ்யாம் ஷா, ராஜூபாய் சோனி, ரமேஷ் சந்தனா மற்றும் ஷைலேஷ் பட் ஆகிய 11 பேரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை:
2002 பிப்ரவரியில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த வகுப்புவாத கலவரத்தின் போது, 21 வயதான பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்திய ஒரு குழு, பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த 11 பேரையும், கடந்த 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி'நன்னடத்தை'யைக் காரணம் காட்டி, குஜராத் அரசு விடுவித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கு விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்தன.
உச்சநீதிமன்றம் அதிருப்தி:
11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குஜராத் அரசை கடுமையாக சாடியது. குற்றவாளிகளுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது. அவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதோடு, அவர்களின் விடுதலையை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டது. தொடர்ந்து வரும் 21 ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என கெடு விதித்தது, ஆனால் இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் 21ம் தேதிக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்தது. அதனடிப்படையில், 11 குற்றவாளிகளும் காவல்துறை முன்பு சரணடந்துள்ளனர்.