பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் தான் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குஅசன்சோல் பிரிவில் உள்ள லஹாபோன் மற்றும் சிமுல்தலா நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்து காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிமென்ட் நிரப்பப்பட்ட சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டிசம்பர் 27 ஆம் தேதி இரவு 11:25 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. சரக்கு ரயில் ஜசிதியிலிருந்து ஜஜாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் பருவா நதி பாலத்தில் சென்றபோது இந்த கோர விபத்து நடைபெற்றது. அதாவது சிமெண்ட் மூட்டையின் பாரம் தாங்காமல் சரக்கு ரயிலின் எட்டு முதல் பத்து பெட்டிகள் தடம் புரண்டதாக சொல்லப்படுகிறது. இதில் பல பெட்டிகள் பாலத்திலிருந்து நேரடியாக ஆற்றில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் இல்லாத சூழல் இருந்தது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement

எனினும், பாலம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் முழுவதும் சிமென்ட் சிதறி அப்பகுதியே புழுதி போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனால் ரயில் தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, கியுல்-ஜசிதிஹ் வழித்தடம் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து புறப்பட்ட பல பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். அசன்சோல், மதுபூர் மற்றும் ஜஜாவிலிருந்து விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் நிவாரண குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

தண்டவாளங்களை சரிசெய்து போக்குவரத்தை மீட்டெடுக்கும் பணிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் விபத்துக்கான உண்மையான காரணம் குறித்த ரயில்வே போலீசாரின் விசாரணையும் தொடங்கியுள்ளது. ஒருவேளை பாலத்தின் உறுதித்தன்மை காரணமாக விபத்து நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.