பீகார் சட்டமன்ற தேர்தலில், கடந்த 6-ம் தேதியன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகி, இதுவரை பீகார் வரலாற்றில் இல்லாத அளவாக சாதனை படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலிலும், விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகின்றன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 60.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், பீகாரில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 64.66% வாக்குகள் பதிவு
பீகாரில், மொத்தம் உள்ள 243 சட்டசபைத் தொகுதிகளில், கடந்த 6-ம் தேதியன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பீகாரில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில், 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் 18 மற்றும் 19 வயது நிரம்பியவர்கள். இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவார்கள்.
இந்த நிலையில், முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவில், பீகார் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 18 மாவட்டங்களில் அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், மாலை 5 மணி நிலவரப்படி, பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.32% வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக ஷேக்புரா மாவட்டத்தில் 52.36% வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இன்று நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவிலும் சாதனை.?
இந்த சூழலில், இன்று பீகாரில் மீதமுள்ள 122 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 60.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தான், 3 மணி அளவில் 60 சதவீதத்தை கடந்து வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனை வைத்து பார்க்கும்போது, இந்த 2-ம் கட்டத்திலும், சாதனை அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றத்தை நோக்கி பீகார்.?
பொதுவாக, ஒரு மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில், அதுவரை இல்லாத அளவில் அதிகமான வாக்குகள் பதிவானால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறுவார்கள்.
பீகாரில், லாலு பிரசாத்திற்குப் பிறகு ஆட்சியை பிடித்த நிதிஷ் குமார், கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது சாதனை அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதால், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லாலுவின் மகன் தேஜஸ்விக்கு இளம் தலைமுறையின் ஆதரவு இருப்பதாக கருதப்படும் நிலையில், இண்டியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளதால், ஒருவேளை பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.