பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது. 


சமூக நீதி அரசியலுக்கு பின்னடைவு: அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. மாநில மக்கள் தொகையில் 15.5 சதவகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது. 


இதை தொடர்ந்து, சாதிவாரி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்த முடிவு செய்து, பிகார் அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது. இடஒதுக்கீடு வரம்பை தற்போதுள்ள 50 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதமாக உயர்த்த பிகார் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


பட்டியல் சமூக மக்களுக்கு 16 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக இடஒதுக்கீடு உயர்த்தப்பட உள்ளது. பிற்படுத்துப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 43 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்யப்பட்டது.


பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி: இந்த நிலையில், இடஒதுக்கீடு வரம்பை உயர்த்திய பிகார் அரசின் நடவடிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. நிதிஷ் குமார் அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இதுகுறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான ரித்திகா ராணி கூறுகையில், "இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்கள் அரசியலமைப்பை மீறியவை என்று நாங்கள் வாதிட்டோம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இன்று இறுதி உத்தரவு வந்துள்ளது" என்றார்.


பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, "இத்தகைய தீர்ப்புகள் சமூக நீதிக்கான இலக்கை நோக்கிய பயணத்தை மேலும் நீட்டிக்க செய்கிறது.


தமிழ்நாடு இதற்காக பல ஆண்டுகளாக போராடியது நினைவிருக்கிறது. அதையே செய்வோம். ஆனால், வழக்கை தொடர்ந்த மனுதாரர்களை திரைமறைவில் இருந்து இயக்குபவர்களின் சமூகப் பின்னணி என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் போதும் அதையே பார்த்தோம்.


நிதீஷ்குமார் தயவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இப்போது ஆட்சியில் உள்ளது. அவர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மக்கள் தொகையில் அதிகம் உள்ளவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்" என்றார்.