Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 645 ஆக உயர்ந்துள்ளது.


மெக்காவில் 68 இந்தியர்கள் மரணம்:


ஹஜ் பயணத்தின்போது 68 இந்தியர்கள் இறந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியாட் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்,  "சுமார் 68 பேர் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பயண்களில் பலர் மூத்த குடிமக்களாக இருந்த நிலையில், அவர்கள்ல் சிலர் இயற்கையான காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்லனர். மேலும் சிலர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாக நாங்கள் கருதுகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜஹ் பயணம் மேற்கொண்ட பல இந்தியர்களை காணவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.


645 ஹஜ் பயணிகள் பலி:


இஸ்லாமியத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் பயணத்தின்போது, நடப்பாண்டில் மட்டும் 550 இறப்புகள் பதிவாகியுள்ளதாக செவ்வாயன்று இரண்டு அரபு தூதரக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அங்கு வீசும் வெப்ப அலைம் கூட்ட நெரிசல்  மற்றும் வயது மூப்பு காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 323 எகிப்தியர்களும், 60 ஜோர்டானியர்களும், 30-க்கும் மேற்பட்ட துனிசியாவை சேர்ந்தவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 550 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் 645 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த எண்ணிக்கை மற்றும் இறப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் சவுதி அரேபியா அரசால் அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்படவில்லை.


மெக்காவில் வெப்ப அலை:


 கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது குறைந்தது 240 பேர் பலியாகினர்.  ஒவ்வொரு தசாப்தத்திலும் சவுதி அரேபியாவின் வெப்பநிலை 0.4 C அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் திங்கட்கிழமை அன்று  51.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தினசரி நூற்றுக்கணக்கானோருக்கு, வெப்பத்தால் ஏற்படும் சோர்வுக்காக மசூதி வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெக்காவில் பல சடங்குகள் திறந்தவெளி மற்றும் கால்நடையாக செய்யப்படுகின்றன. இது பக்தர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கடும் சவால்களை உருவாக்குகின்றன. 


வெப்ப அலை எச்சரிக்கை:


உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ்ஜிற்கு, இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர் வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு கடும் வெப்ப அலை வீசுவதால்,  புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலை எதிர்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து யாத்ரீகர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. குளிபானங்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதோடு, குடை பிடித்து செல்லவும் வலியுறுத்தப்படுகின்றனர்.