பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் - பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தலா 101 தொகுதிகளில் பாஜக-வும், ஜனதா தளமும் போட்டியிட்டன. இதில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 

Continues below advertisement

உள்துறையை இழந்த நிதிஷ்குமார்:

நிதிஷ்குமார் முதலமைச்சராக மீண்டும் தொடர்வார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் யார்? யார்? அவர்களுக்கான துறை என்ன? என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் இத்தனை ஆண்டுகளாக முதலமைச்சராக உள்துறையை தன்வசம் வைத்திருந்த நிதிஷ்குமாருக்கு இந்த முறை உள்துறை இல்லை. அவருக்கு பொது நிர்வாகம், அமைச்சரவை நிர்வாகம், கண்காணிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

2005ம் ஆண்டு முதல் நிதிஷ்குமார் வசம் அதாவது ஐக்கிய ஜனதா தளம் வசம் இருந்த உள்துறை பாஜக வசம் சென்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வும், அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சருமான சாம்ராட் செளத்ரிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாஜக வசம் முக்கிய துறைகள்:

மொத்தமுள்ள 26 அமைச்சர்களில் முக்கிய துறைகளை பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. பாஜக வசம் சென்றுள்ள துறைகளை கீழே காணலாம்.

சாம்ராட் செளத்ரி - உள்துறை

மங்கல் பாண்டே - சட்டம் ஒழுங்கு

நிதின் நவீன் - சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி

ராம்கிரிபால் யாதவ் - விவசாயத்துறை

அருண்சங்கர் பிரசாத் - சுற்றுலா, கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன்

ஸ்ரேயாசி சிங் - தகவல்தொடர்பு மற்றும் பொதுத்தொடர்பு, விளையாட்டு

திலீப் ஜெய்ஸ்வால் - தொழில்நிறுவனங்கள்

சஞ்சய் டைகர் - பணியாளர்கள் மேலாண்மை

சுரேந்திரா மேதா - கால்நடை, மீன்வளத்துறை

நாராயண பிரசாத் - பேரிடர் மேலாண்மை

லகேந்திர பஸ்வான் - ஆதிதிராவிட, பழங்குடியின நலத்துறை

ரமா நிபத் - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை

பிரமோத் சந்திர பன்ஷி - கூட்டுறவு, சுற்றுச்சூழல், வனத்துறை

பறிபோன முக்கிய துறைகள்:

ஒரு மாநிலத்தின் முக்கிய துறைகளான உள்துறை, தொழில்துறை, சட்டம், தகவல் தொடர்பு, விவசாயம் என முக்கிய துறைகள் அனைத்தும் தற்போது பாஜக வசம் சென்றுவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியுடன் மத்தியில் 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த பாஜக, தற்போது பீகாரில் கோலோச்சத் தொடங்கியுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் முதலமைச்சர் பதவியை மட்டுமே தன்வசம் வைத்திருந்தும் உள்துறை, தொழில்துறை, சட்டம் போன்ற அனைத்து முக்கிய துறைகளையும் கூட்டணி கட்சியிடம் இழந்து நிற்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொம்மை முதல்வரா?

ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியுடன் மத்தியில் ஆட்சி வகிக்கும் பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தின் அதிகாரத்தை குறைக்கும் போக்காகவே இந்த அமைச்சரவை பொறுப்பு வழங்கல் கருதப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதன்மூலம் 10வது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள நிதிஷ்குமாரை பொம்மை முதல்வர் போல மாற்றும் செயலாகவும் இது உள்ளதாக அரசியல் நிபுணர்கள் இந்த அமைச்சரவை பொறுப்புகள் வழங்கல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது கட்சியினருக்கு முக்கிய பொறுப்புகளை வாங்கித் தராத நிதிஷ்குமார் மீது கட்சியினர் மத்தியில் அதிருப்தியும் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.