தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க, 3 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அவரது இந்த பயணத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

ஜெய்ராம் ரமேஷின் பதிவு என்ன.?

பிரதமர் மோடியின் பயணம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் இன்றும் நாளையும் கலந்து கொள்கிறார். அதிபர் டிரம்பும் அமெரிக்காவும் உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதால் அவர் பாதுகாப்பாக கலந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டிற்காக திரு. மோடி கோலாலம்பூருக்குச் செல்லவில்லை. ஏனெனில், அப்போது அவர் அதிபர் டிரம்பை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் ஜி20 கருப்பொருள்களான ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை அமெரிக்கா எதிர்க்கிறது என்றும் அவை அமெரிக்க எதிர்ப்புக்கு சமம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியது அசாதாரணமானது. ஏனெனில், மே 10-ம் தேதி மாலை 5:37 மணிக்கு, ஆபரேஷன் சிந்தூரை திடீரென நிறுத்துவதாக உலகிற்கு அறிவித்த முதல் நபர் மார்கோ ரூபியோ தான்.

Continues below advertisement

ஜி20 தலைமைத்துவம் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இந்தியா நவம்பர் 2023-ல் இந்தோனேசியாவிடமிருந்து பொறுப்பை பெற்றது. நவம்பர் 2024-ல் பிரேசிலிடம் ஒப்படைத்தது. இப்போது தென்னாப்பிரிக்கா அமெரிக்காவிடம் ஒப்படைக்க உள்ளது. ஆனால், அமெரிக்கா பங்கேற்கவில்லை.

எனவே, ஒரு வருடம் கழித்து அடுத்த ஜி20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும். அதற்குள், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் முடிந்துவிடும். ஆனால், கடந்த 7 மாதங்களில், அதிபர் ட்ரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூர்-ஐ நிறுத்தியதாகக் கூறியிருக்கிறார். அடுத்த பன்னிரண்டு மாதங்களில் அவர் அந்தக் கூற்றுக்களை இன்னும் எத்தனை முறை மீண்டும் கூறுவார் என்று கற்பனை செய்து பாருங்கள். 'எனது நல்ல நண்பருடன்' கட்டிப்பிடிப்பது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா அல்லது கைகுலுக்கல்கள் மட்டுமே இருக்குமா அல்லது திரு. மோடி செல்லமாட்டாரா - காலம்தான் பதில் சொல்லும்.“ என்று கூறியுள்ளார்.

ஜி20 உச்சிமாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது ஏன்.?

ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஜி20 உச்சிமாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேச உள்ளார். இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் தான், பிரதமர் மோடியின் பயணத்தை காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.