கல்வி கற்பதற்கு வயது மட்டுமின்றி நம் உடல் நலமும் ஒரு குறையில்லை என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு எல்லாம் மணி மகுடமாய் பீகாரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பது பீகார்.


இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ஜமுய் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள படேபூரில் தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் 10 வயது சிறுமி சீமாகுமாரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படேபூருக்கு வந்த டிராக்டர் சீமாகுமாரியின் கால் மீது ஏறி இறங்கியது. இதனால், படுகாயமடைந்த சீமாகுமாரியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.




அங்கு சீமாகுமாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது ஒரு இடது காலை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். சீமாகுமாரியை காப்பாற்றுவதற்காக அவரது பெற்றோர்களும் வேறு வழியின்றி காலை அகற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். தனது ஒரு காலை அகற்றினாலும், தனது நம்பிக்கையை சீமாகுமாரி இழக்கவில்லை. தனது ஒற்றை காலை வைத்துக்கொண்டே சீமாகுமாரி நடக்க கற்றுக்கொண்டுள்ளார். தன் வயது  சிறுவர்கள், சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை பார்த்த சீமாகுமாரிக்கு தனக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.






சீமாகுமாரியின் நிலையை கண்டு சீமா எப்படி பள்ளிக்கு செல்லப்போகிறார் என்று பதறிய பெற்றோர் பின்னர் அவரது ஆர்வத்தை கண்டு அருகில் இருந்த அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டனர். சீமாகுமாரியும் தானே சீருடை அணிந்து கொண்டும், தானே தனது புத்தகங்களை பைகளில் எடுத்து வைத்தும் பள்ளிக்கு சென்று வருகிறார்.


சீமாகுாமரியின் வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சீமாகுமாரி தினமும் தனது ஒற்றைக் கால் மூலம் குதித்து, குதித்து சென்று வருவது அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் வேதனையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீமாகுமாரி ஒற்றைக்காலில் குதித்து, குதித்து பள்ளிக்கு செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவருக்கு போதிய உதவிகள் செய்ய வேண்டும் என்றும், அவர் பள்ளி சென்று வர போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.




இதுதொடர்பாக, 10 வயது மாணவியான சீமாகுமாரி கூறும்போது, “என்னுடைய தந்தையும், தாயும் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் கூலித்தொழிலாளிகள். என்னுடைய தந்தை ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர்.  தாய் கிராமத்திலே செங்கல்சூளைக்கு வேலைக்க செல்கிறார். நான் படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்பதே எனது கனவு. அப்போதுதான் எனது அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க முடியும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.


சீமாகுமாரியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த மாவட்ட மேஜிஸ்திரேட் அவனிஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள் சீமாகுமாரியின் கிராமத்திற்கு நேரில் சென்று அந்த சிறுமிக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கினர். மேலும், சீமாகுமாரிக்கு செயற்கையாக இடது காலை பொருத்துவது தொடர்பாகவும் ஆலோசித்தனர். பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி, சீமா தொடர்ந்து படிப்பார், நடக்கவும் செய்வார் என்று டுவீட் செய்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண