இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர் லல்லு பிரசாத் யாதவ். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான இவருக்கு தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் என்ற இரு மகன்கள் உள்ளனர். பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சியாக லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது.
பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் உள்ளார். 32 வயதான தேஜஸ்வி யாதவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்து மதத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கிறஸ்தவ மதத்தைச் சேர்ந்த ரேச்சல் ஐரீஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார். ரேச்சல் ஐரீசின் தந்தை ஹரியான மாநிலத்தின் பிரபல தொழிலதிபர் ஆவார்.
இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததற்கு, அவரது தாய்மாமாவும், லல்லு பிரசாத் யாதவின் மைத்துனருமான சாது யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,
“ என் சகோதரி ராப்ரி தேவியின் இரண்டு மகன்களும் மிகவும் ஒழுக்கமில்லாதவர்கள். இது பீகார் மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். என் சகோதரியின் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோரின் செயல்கள் எங்கள் குடும்பத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எங்கள் குடும்பத்தின் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மற்றவர்கள் தயங்குகின்றனர். “
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சாது யாதவ் ஒரு காலத்தில் லல்லு பிரசாத் யாதவுடன் மிகவும் நெருக்கமாக வலம் வந்தார். பீகார் மாநிலத்தின் முதல்வராக லல்லு பிரசாத் யாதவ் திகழ்ந்த காலத்தில், பீகாரில் மிகவும் அதிகாரமிக்க நபராக சாது யாதவ் வலம் வந்தார். பின்னர், லல்லு பிரசாத் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இருந்து விலகினார். தேஜஸ்வி யாதவ் திருமணம் செய்துள்ள ரேச்சல் ஐரீஷ் அவரது பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணத்தில் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே பங்கேற்றனர்.
மேலும் படிக்க : Watch Video: சத்துணவு முட்டைக்கு எதிர்ப்பு: லிங்காயத் தலைவர்களை சாடிய பள்ளிச் சிறுமி!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்