ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அக்கூட்டணி பெற்றது.
பாஜக-வுடனான கூட்டணி முறிவு:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய கூட்டணி கட்சிகள் இணைந்து பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வந்தன. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக-வுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ் குமார் அறிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடது சாரி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ்-ம் பதவியேற்றனர்.
இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது, இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சட்டப்பேரவையில், ஆட்சியமைக்க பெரும்பான்மையாக குறைந்தபட்சம் 122 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிரூபித்தது. இதன் மூலம் நிதிஷ் குமார், ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.
இன்று வாக்கெடுப்பு நடைபெறும் போது, பாஜக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, பாஜக-வைச் சேர்ந்த சபாநாயகர், வி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .அதனை தொடர்ந்து துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி சட்டப்பேரவையை வழி நடத்திச் சென்றார்.