Bihar Election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி, 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவில் இதுவரை இல்லாத அளவில் சுமார் 64 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. அதனை தொடர்ந்து, இன்று மீதமுள்ள 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிது. 18 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில், ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்களும்.. ஏற்பாடுகளும்..
தேர்தல் ஆணைய தரவுகளின்படி, ஒரு கோடியே 74 லட்சம் பெண் வாக்காளர்கள் உட்பட, சுமார் 3.7 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கி 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் வருபவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
முன்னாள் துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் (கடிஹார்), முன்னாள் சபாநாயகர் உதய் நரேன் சவுத்ரி (சிகந்திரா), மற்றும் முன்னாள் அமைச்சர்களான வினய் பிஹாரி (லௌரியா), நாராயண் பிரசாத் (நௌதன்), ஷமிம் அகமது (நர்கடியா), ராணா ரந்தீர் சிங் (மடுபன்), பிரமோதி குமார் (மடுபன்), பிரமோதி குமார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ரேணு தேவி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.
நிதிஷ் Vs தேஜஸ்வி கடும் போட்டி:
2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், 2025 தேர்தலின் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் மகாகத்பந்தன் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவியது. அப்போது பாரதிய ஜனதா கட்சி (BJP), ஜனதா தளம் (United), மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி (VIP) ஆகியவற்றைக் கொண்ட NDA, இவற்றில் சுமார் 71 இடங்களை வென்றிருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தன் சுமார் 49 இடங்களைப் பெற்றது. மீதமுள்ள சில இடங்களை லோக் ஜனசக்தி கட்சி (LJP) மற்றும் பிற கட்சிகள் கைப்பற்றின.
பல ஆண்டுகளாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளின் அரசியல் கணக்கீடுகள் எம்எல்ஏக்கள் கட்சி தாவல், ராஜினாமாக்கள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் காரணமாக மாறிவியுள்ளன. சீமாஞ்சல் பகுதியில் வெற்றி பெற்ற AIMIM-இன் பல எம்எல்ஏக்கள் பின்னர் RJD-யில் இணைந்தனர், இது மகா கூட்டணியின் இருப்பை வலுப்படுத்தியது. இதற்கிடையில், சில ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறியதால் அல்லது அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
ஆட்சி மாற்றமா?
பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் முதலமைச்சராக தொடர்கிறார். அவரது பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தொடருமா? என்பதை இந்த பொதுத்தேர்தல் தீர்மானிக்க உள்ளது. இரண்டு கட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்ட வெடி விபத்து தீவிரவாதிகளின் தாக்குதலா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பான தகவல் ஏதேனும் இன்று வெளியானால், பாதுகாப்பில் கோட்டை விட்டதாக மத்திய அரசுக்கும், அவர்களது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாருக்கும் எதிராக இன்றைய வாக்குப்பதிவு மாறக்கூடும்.